Published : 07 Sep 2022 10:11 AM
Last Updated : 07 Sep 2022 10:11 AM

டெல்லியில் ராஜபாதை பெயர் மாற்றம்: பின்னணி என்ன?

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ராஜபாதையின் பெயர் ‘கர்த்தவ்ய பாத்' என்று மாற்றப்பட்டு உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்டெல்லியில் நேதாஜி சிலை முதல்குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான சாலைக்கு 'கிங்ஸ்வே' என்று பெயர் சூட்டப்பட்டது. இதனை இந்தியில் 'ராஜபாதை' என்று அழைத்தனர்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜபாதையின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி டெல்லி ராஜபாதை இனிமேல் ‘கர்த்தவ்ய பாத்' என்று அழைக்கப்படும். இதற்கு, ‘கடமையை செய்யும் பாதை' என்று அர்த்தம். டெல்லி மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட உள்ளது.

ரேஸ் கோர்ஸ் சாலை

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்ட பெயர்கள், நடைமுறைகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை என்று அழைக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில் இந்த சாலை, லோக் கல்யாண் சாலை என்று மாற்றப்பட்டது.

நேதாஜி ஹாலோகிராம் சிலை

டெல்லி இந்தியா கேட் பகுதியில் பிரிட்டிஷ் மன்னர் 5-ம் ஜார்ஜின் சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்த சிலை கடந்த 1968-ம் ஆண்டு அகற்றப்பட்டது. கடந்த ஜனவரியில் அங்கு 28 அடி உயரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஹாலோகிராம் சிலை நிறுவப்பட்டது. இந்த இடத்தில் விரைவில் 25 அடி உயரத்தில் நேதாஜியின் கிரானைட் சிலை அமைக்கப்பட உள்ளது.

ஆங்கிலேயர் பாடல் நீக்கம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பி செல்லும் பாசறை திரும்பும் அணிவகுப்பு ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலேயர்களின் ‘அபைட் வுத் மீ' பாடல் இசைக்கப்படும். கடந்த குடியரசு தின விழாவில் இந்த பாடல் நீக்கப்பட்டு, லதா மங்கேஷ்கர் பாடிய ‘ஆயே மேரே வதன் கே லோகோ' என்ற பாடல் இசைக்கப்பட்டது.

அந்தமான்-நிகோபர் தீவில் ஆங்கிலேயர்கள் பெயரில் இருந்த 3 தீவுகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் உட்பட 3 இந்திய தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

இந்திய கடற்படை கொடியில் ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் இருந்தன. அவை நீக்கப்பட்டு சத்ரபதி சிவாஜியின் சின்னம் பொறிக்கப்பட்ட புதிய கொடி கடந்த 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இதேபோல ஆங்கிலேயர் கால அடிமைத்தனத்தின் அடையாளங்களை பாஜக அரசு ஒவ் வொன்றாக நீக்கி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x