

இந்தியப் பெண் கல்வியின் தரம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்தோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான நிலையில் இருப்பதாகக் கூறுகிறது ஓர் ஆய்வு.
இதன் மூலம் இந்தியப் பள்ளிக்கல்வி முறை தன் செயல்திறனிலும், தரத்திலும் குறைந்து காணப்படுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த சர்வதேச கல்வி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
இக்கட்டுரையின் ஆய்வாசிரியர்களில் ஒருவரான ஜஸ்டின் சாண்டஃபர் கூறும்போது, ''இந்தியாவைப் பொறுத்தவரை ஐந்தாம் வகுப்பை முடித்து அடிப்படைக் கல்வியறிவைப் பெற்ற பெண்கள் 48 சதவீதத்தினராக இருக்கின்றனர். இதுவே நேபாளத்தைப் பொறுத்தவரை 92 சதமாகவும், பாகிஸ்தானில் 74 சதவீமும், வங்கதேசத்தில் 54 சதவீதமாகவும் உள்ளது.
இது இந்தியக் கல்வி முறையின் தரம் குறைந்து வருவதற்கான எளிமையான, அதே நேரம் வலிமையான குறியீடாகத் தெரிகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பள்ளிகள், வாசிக்கக் கூட முடியாத மாணவர்களை ஊக்குவித்து, மிகவும் சலுகை காட்டுவதை உணர்த்துகிறது'' என்றார்.
மேலும், இரண்டு வருடப் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு பெண் கல்வியின் விகிதம் இந்தியாவைப் பொறுத்தவரை 1 - 15 % ஆக இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் முறையே 3 - 31% மற்றும் 11 - 47 % ஆக உள்ளது. இது இந்தியாவோடு ஒப்பிடும்போது, பாகிஸ்தானில் பள்ளிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.
மக்கள் தொகையியல் மற்றும் சுகாதார கருத்தாய்வு (டிஹச்எஸ்) முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.