Published : 06 Sep 2022 10:42 AM
Last Updated : 06 Sep 2022 10:42 AM

மத உரிமையை பள்ளி வரை எடுத்துச் செல்லலாமா? - ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

ஹிஜாப் வழக்கு | கோப்புப் படம்.

புதுடெல்லி: "ஒரு தனிநபர் தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றும் உரிமை இருக்கிறது. ஆனால் அவர் அந்த உரிமையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட சீருடையைக் கொண்ட பள்ளி வரை எடுத்துச் செல்ல முடியுமா?" என்று ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என‌ கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நேற்று (செப்.5)) உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதாஷு துலியா அடங்கிய அமர்வு முன் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது உச்ச நீதிமன்ற அமர்வு, "உங்களுக்கு மத உரிமை இருக்கலாம். அது சார்ந்து நீங்கள் எந்த ஒரு பழக்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் நீங்கள் பின்பற்றும் பழக்கங்களை மத உரிமை என்ற பெயரில் நிர்ணயிக்கப்பட்ட சீருடைப் பழக்கம் உள்ள பள்ளிக்கும் எடுத்துச் செல்வது சரியா?" என்று வினவியது. மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம் நீதிமன்றம் இந்தக் கேள்வியை முன்வைத்தது.

அப்போது, ஹிஜாப் தடையால் பெண் கல்விக்கு பாதிப்பு வரலாம் என்று வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "மாநில அரசு ஹிஜாப் உரிமையை மறுக்கவில்லையே. மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்போது அங்குள்ள சீருடையை அணிந்துவர வேண்டும் என்று மட்டும் தானே கூறுகிறது" என்றனர். அதற்கு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறுகையில், "இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற சொல்லவிருக்கும் தீர்ப்பு சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் கல்வியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

அரசு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே.எம்.நடராஜ், "இந்தப் பிரச்சினையின் வீச்சு சிறியது. இது கல்வி நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் சார்ந்தது" என்றார். அதற்கு உச்ச நீதிமன்றம், "பள்ளிக்கு ஒரு பெண் குழந்தை ஹிஜாப் அணிந்து வருவதால் எப்படி அப்பள்ளியின் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது என்று விவரியுங்கள்" என்றது. அதற்கு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் நடராஜ், "ஒரு நபர் தனது மத உரிமையை மத நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கத்தை முன்வைத்து நான் பள்ளியின் நடைமுறைகளை, விதிமுறைகளை மீறுவேன் என்று கூற முடியாது அல்லவா" என்றார்

அப்போது குறுக்கிட்ட கர்நாடகா மாநில அட்வகேட் ஜெனரக் பிரபுலிங் நவட்கி, "மாநில அரசுகள் அல்ல கல்வி நிறுவனங்கள் தான் அவற்றிற்கென சீருடைகளை உருவாக்குகின்றன. அரசு மாணவர்களின் உரிமையை கட்டுப்படுத்தவில்லை" என்றார்.
இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், "அரசியல் சாசன சட்டப்பிரிவு 145 (3)ன் படி இது முக்கியமான விவகாரம். அதனால் இதனை எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது என்பது முக்கியம்" என்றார்.

அப்போது நீதிபதிகள் "சட்டப்பிரிவு 25ன் படி ஹிஜாப் அணிவது அவசிய நடைமுறையா என்பதை வேறுவிதமாகவும் அணுகலாம். அது அவசியமானதாகவும் இருக்கலாம். அவசியம் இல்லாததாகவும் இருக்கலாம். நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், அரசு கல்வி நிலையங்களில், மத அடையாளங்களைப் பின்பற்றுவதை வலியுறுத்த முடியுமா? ஏனெனில் நம் அரசியல் சாசன முன்னுரையிலேயே நமது தேசம் மதச்சார்பற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளதே" என்ற கருத்தை முன்வைத்தனர்.

அதற்கு வழக்கறிஞர் ராஜீவ் தவான், "இவ்வழக்கில் இந்த நீதிமன்றம் சொல்லப்போகும் தீர்ப்பை இந்த உலகம் முழுவதுமே கேட்கும். இந்தத் தீப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார். அதற்கு நீதிமன்றம், "கர்நாடகா கல்விச் சட்டம் மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கவில்லை என்றால் மாணவிகள் மிடி, மினி ஸ்கர்ட்டில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளுமா" என்று வினவியது. அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஹெக்டே, மாநில அரசின் நிர்வாக செயல்பாடுகளை அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கணக்கில் கொள்ளப்படக் கூடாது" என்றார். இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x