

புதுடெல்லி: தாய்மொழியில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளிக் கல்வியில் சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நேற்றுநடைபெற்ற விழாவில், நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 46 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். பின்னர், இவ்விழாவில் அவர் பேசியதாவது:
அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை தாய்மொழியில் கற்பிப்பது மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாய் மொழியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியை போதித்தால் அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். தாய்மொழியில் சிந்திக்கும்போது அவர்களது அறிவாற்றல் அதிகரிக்கும்.
இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிக் கல்வி முறை, உலகின் மிகப்பெரிய கல்விமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்க்கிறது.
இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.