

‘‘பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை 4 மாநிலங்களில் வெளியிட மாட்டோம்’’ என்று இந்திய திரைப்பட திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய தால், பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில நவநிர்மாண் சேனா கட்சி வலியுறுத்தியது. அதன்பின், பாலிவுட் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்களை மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கோவா ஆகிய 4 மாநிலங்களில் வெளியிட மாட்டோம் என்று இந்திய திரைப்பட திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் (‘சினிமா ஓனர்ஸ் எக்ஸிபிடார்ஸ் அசோசியேஷன் ஆப் இண்டியா’) நேற்று அறி வித்தது.
இதனால், பாலிவுட்டில் பிரபல இயக்குநர் கரண் ஜோஹார் இயக்கியுள்ள, ‘ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மிக நெருக்கமாக நடித்துள்ள விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் நடித்துள்ளார். அதனால் ஏ தில் ஹை முஷ்கில் படமும் இந்த 4 மாநிலங்களில் தீபாவளியன்று வெளியாகாது என்று தெரிகிறது.
இதுகுறித்து, இந்தியத் திரைப்பட திரையரங்கு உரிமை யாளர்கள் சங்க தலைவர் நிதின் தாதர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனதில் நாட்டுப் பற்று, தேச நலன் ஆகியவற்றைக் கருதி, பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், இசை யமைப்பாளர்கள், இயக்குநர்கள் பணியாற்றியுள்ள இந்திய திரைப்படங்களை வெளியிட கூடாது என்று விநியோகஸ் தர்களிடம் கூறியிருக்கிறோம். எந்த அரசியல் கட்சியின் நிர்பந்தத்துக்கும் அடிபணிந்து இந்த முடிவை நாங்கள் எடுக்க வில்லை. நாட்டு மக்களின் உணர்வுகளை மனதில் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரையில் பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை வெளியிட மாட்டோம்.
இவ்வாறு நிதின் கூறினார்.
‘‘ஷாருக்கான் மற்றும் பாகிஸ்தான் நடிகை மஹிரா நடித்துள்ள ‘ராயீஸ்’ படத்துக்கும் இந்த தடை நீடிக்குமா?’’ என்று செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு நிதின் பதில் அளிக்கும்போது,‘‘ராயீஸ் படம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் நடிகர்களின் விசாவை திரும்ப பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.