

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதா வரி மாவட்டம், நகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட கெயில் நிறுவன எரி வாயு கசிவு தீ விபத்துக்கான அடிப் படை காரணம் குறித்து மத்திய அரசு நியமித்த ஆர்.பி சிங் தலைமை யிலான உயர்நிலைக் குழு விசாரணையைத் தொடங்கி யுள்ளது. இதனிடையே இந்த கோர விபத்துக்கு கெயில் நிறுவனத்தின் அலட்சியப்போக்கே முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எரிவாயு கசிவு காரணமாக நகரம் கிராமத்தில் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு காற்றில் எரி வாயு பரவியது. இதனை இரவில் கவனித்த சிலர் பனி மூட்டம் என நினைத்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன்னர் இந்த பைப்லைனில் 4 இடங்க ளில் கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கெயில் நிறுவன அதிகாரிகளுக்கு தெரி வித்துள்ளனர். சுமார் 15 ஆண்டு களுக்கு முன்னர் அமைத்த பைப் லைன் என்பதால் பட இடங்களில் சேதமடைந்து இருந்துள்ளது. ஆனால் அந்த பைப்லைனை முழு மையாக மாற்றாமல் உடைப்பு ஏற்பட்ட குழாய்களை மட்டும் பழுது பார்த்துவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். அவர்கள் பழுது பார்த்த இடத்தில்தான் வியாழக்கிழமை இரவு கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டுள்ளது.
இதுபோன்ற பைப்லைன்கள், நெடுஞ்சாலைகள் அல்லது கிராமங் களுக்கு ஒதுக்குப்புறத்தில் அமைக் கப்படுவது வழக்கம். ஆனால், நகரம் கிராமத்தில் குடிசை வீடுகளுக்கு கீழேயே பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பைப்லைனில் 1 முதல் 2 கிலோ மீட்டருக்குள் ஆங்காங்கே கேட்-வால்வுகள் அமைக்கப்பட வேண் டும். ஆனால் நகரம் கிராமப் பகுதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்-வால்வுகள் அமைக்கப்பட வில்லை. கேட்-வால்வ் அமைக்கப்பட்டிருந்தால் எரிவாயு கசிவு ஏற்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடி யாக கேட்-வால்வை மூடி கசிவை தடுத்திருக்கலாம். பலி எண்ணிக் கையும் குறைந்திருக்கும்.
அழகிய கிராமம்
கிழக்கு கோதாவரி மாவட்டம் மாமிடி குதுரு மண்டலத்தில் உள்ள நகரம் கிராமம் முழுவதும் தென்னை தோப்புகள், வயல்கள், தண்ணீர் வாய்க்கால், வரப்புகள் என அழகிய தோற்றம் கொண்ட தாகும். தீ விபத்துக்கு பிறகு நகரம் கிராமம் நரகமாக காட்சி அளிக் கிறது. இந்த கோர தீ விபத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.
காலையில் ஏற்பட்டிருந்தால்...
இரவு நடந்த எரிவாயு கசிவு ஒருவேளை காலை 9 அல்லது 10 மணியளவில் நடந்திருந்தால் பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நகரம் கிராமத்தின் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை 219 உள்ளது. மேலும் விபத்து நடந்த 100 மீட்டர் தூரத்தில் 2 தனியார் பள்ளிகளும் ஓர் அரசுப் பள்ளியும் உள்ளன. தனியார் பள்ளிகளில் சுமார் 2000 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 120 மாணவர்கள் தீ விபத்து ஏற்பட்டவுடன் விடுதிகளில் இருந்து வெளியே ஓடி உயிர் பிழைத் துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது கிழக்கு திசையில் காற்று வீசி உள்ளது. இதுவே மேற்கு திசையில் வீசி இருந்தால் இந்த விடுதி மாணவர்களும் பிழைத் திருக்க மாட்டார்கள் என விடுதியின் வார்டன் தெரிவித்தார்.
பலி எண்ணிக்கை உயர்வு
விபத்து காரணமாக வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத் தில் 22 பேர் படுகாயமடைந்து காக்கிநாடா, ராஜமுந்திரி, அமலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இதில், லட்சுமி ஜோஷ்னா (5) என்ற சிறுமியும் அடை யாளம் தெரியாத ஆண் ஒரு வரும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந் துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வரும் 20 பேரில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயர் சிகிச்சைக்காக இவர்களை ஹைதராபாத் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.