

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையின்போது, தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கொண்டகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறும்போது, ''ஞாயிற்றுக்கிழமை இரவு சத்தீஸ்கர் ஆயுதப் படையும், பயனார் காவல்துறையும் இணைந்து செரி காடுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார்.
சண்டை நடந்த இடத்தைச் சோதனையிட்டபோது மாவோயிஸ்ட் சீருடை அணிந்த ஆணின் சடலம் கிடைத்தது. அவரின் அருகில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியும், சில ஆயுதங்களும் கிடந்தன.
வெளிச்சம் இல்லாததால் சண்டை நடைபெற்ற இடத்தை முழுமையாகச் சோதனையிட முடியவில்லை. ஆனால் மாவோயிஸ்ட்கள் தரப்பில் சேதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். காவல்துறையினர் நள்ளிரவில் பாதுகாப்பாக பயனார் காவல்நிலையத்தை அடைந்தனர்'' என்றார்.
சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் யார் என்பதைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.