Last Updated : 17 Oct, 2016 09:19 PM

 

Published : 17 Oct 2016 09:19 PM
Last Updated : 17 Oct 2016 09:19 PM

பாகிஸ்தான் அரசின் அனைத்து அமைப்புகளும் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கின்றன: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

இந்தியாவில் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் பணியில் பாகிஸ்தான் அரசின் அனைத்து அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.

வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான பிராந்திய பத்திரிகை ஆசிரியர்கள் 2 நாள் மாநாடு சண்டீகரில் திங்களன்று தொடங்கியது. இம்மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாகிஸ்தான் அரசின் அனைத்து அமைப்புகளும் இந்தியாவில் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகின்றன. இதனால் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியை நிர்வகிப்பது சவாலாக உள்ளது. ஆனால் பாம்பு வளர்ப்பவர்கள் அவற்றால் தங்களுக்கும் ஆபத்து இருப்பதை உணரவேண்டும்.

தீவிரவாதத்தை அரசின் கொள்கையாக பாகிஸ்தான் கடைப்பிடிக்கிறது. இதனால் தெற்கு ஆசியாவில் மட்டுமல்ல. சர்வதேச சமூகத்திடம் இருந்தும் பாகிஸ்தான் தனிமைப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மனதை, அந்நாட்டுக்கோ அல்லது பிறருக்கோ எந்தப் பலனையும் தராத சில விஷயங்கள் ஆட்டிப் படைக்கிறதது. இதனால் தீவிரவாதிக்கும் விடுதலைப் போராட்ட வீரருக்கும் இடையிலான வேறுபாடு மறந்துவிட்டது.

பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் தீவிரவாதத்தையே இந்தியா வெறுக்கிறது. பாகிஸ்தான் மக்களை வெறுக்கவில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாடு தெளிவாக இருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் உதவிட இந்தியா தயாராக உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் எந்த நாட்டிடம் இருந்தும் பாகிஸ்தான் உதவி பெற முடியும். ஆனால் அதன் விருப்பங்கள் தெளிவாக இல்லை.

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மூடப்பட்டால், தெற்கு ஆசியாவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான வழி திறக்கும்.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான 2,289.66 கி.மீ. நீள எல்லையில் 2,034.96 கி.மீ. தொலைவுக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 254.8 கி.மீ. தொலைவு, வேலி அமைக்க முடியாத கடின நிலப் பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் ரேடார், சென்சார் கருவிகள் மற்றும் லேசர் சுவர் அமைக்கப்படும். இதற்கான திட்டம் ஜம்முவில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் நீக்கப்பட்ட பின் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 2018 டிசம்பருக்குள் இந்தியா – பாகிஸ்தான் எல்லை முழுவதும் மூடப்படும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x