

கேரளாவில் கட்சித் தொண்டர் படுகொலையைக் கண்டித்து பாஜக நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் முதல்வரின் சொந்த ஊரான பினராயி பகுதியில் பாஜக தொண்டர் நேற்றுமுன்தினம் காலை பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணி யில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் இருப்பதாக பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தக் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அத்துடன் மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்தனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்து கள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் ரயில்களில் வந்த பயணிகள் வீடுகளுக்கு செல்ல வாகனங்கள் இல்லாமல் தவித்தனர். முழு அடைப்பு போராட் டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந் தது. இஸ்ரோ மையம் மற்றும் டெக்னோபார்க் பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் கேரளாவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஜக.வினர் கண்டன பேரணியும் நடத்தினர். அப்போது முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.