சாலைக்காக மரம் வெட்டியதில் பறவைகள் உயிரிழப்பு - இணையத்தில் வைரலான வீடியோ

கேரளாவில் சாலை விரிவாக்க பணிக்காக ஒரு மரத்தை வெட்டிய போது அதில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தன.
கேரளாவில் சாலை விரிவாக்க பணிக்காக ஒரு மரத்தை வெட்டிய போது அதில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தன.
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் சாலைப் பணிக்காக பொறுப்பற்ற வகையில் ஒரு மரத்தை வெட்டியதில் அதில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி எடவன்னா அருகே வி.கே.படி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த மரங்கள் புதன்கிழமை வெட்டப்பட்டன.

அப்போது ஒரு மரத்தை அகற்றியபோது அதிலிருந்த ஏராளமான கூடுகள் சேதம் அடைந்ததுடன் அவற்றில் இருந்த முட்டைகளும் நொறுங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தன.

இது தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் கடந்த வியாழக்கிழமை வெளியானதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது. உலகிலேயே மோசமான உயிரினம் மனிதன்தான் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஜேசிபி டிரைவர், மரம் வெட்டியவர், பணி ஒப்பந்ததாரர் ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in