Published : 04 Sep 2022 03:53 AM
Last Updated : 04 Sep 2022 03:53 AM

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு கடும் நிதிச் சுமை - தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி

கேரள மாநிலம் கோவளத்தில் நேற்று நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர்.

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிவிதிப்பால் மாநிலங்கள் கடும் நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. எனவே, இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மாநில காவல் துறை தலைவர்கள் பங்கேற்ற, 30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கோவளத்தில் நேற்று நடை பெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இக்கூட்டத்தை தொடங்கிவைத்தார். இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். இதை 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்தபோது, நாங்கள் சிறுபான்மையினராக இருந்தோம். தற் போது எல்லா மாநில அரசுகளும், மாநிலக் கட்சிகளும் இந்த தத்துவத்தை வலியுறுத்துகின்றன.

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படைத் தத்துவத்தின்படி, நாங்கள் திராவிட மாடல் ஆட்சியை நிறுவியுள்ளோம். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

ஜிஎஸ்டி வரி விதிவிதிப்பால் மாநிலங்கள் கடும் நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. எனவே, இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதி மற்றும் இதர நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு’ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் இதில் தலையிட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அந்த சட்ட முன்வடிவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விமான நிலையங்கள் அமைக்க, வழக்கமாக மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு இலவசமாக வழங்கும். பின்னர், அந்த இடத்தை 3-வது நபருக்கு விமான நிலைய ஆணையம் வழங்கும்போது, அதன் மதிப்பில், பெரிய அளவில் முதலீடு செய்த மாநில அரசுகளுக்கு அதிக பங்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாநகரங்களுக்கு இடையிலும், தமிழகத்தை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையிலும் அதிவிரைவு ரயில் தடங்களை அமைக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன், மாநிலத்தின் பொருளாதரமும் செழிப்படையும்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, தொழில் துறை ஒருங்கிணைப்பு தொடர்பாக, தூதரகங்கள், அமைச்சகங்கள், முகமைகள், வெளிநாடுகள் ஆகியவற்றுடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் தேவையான அனுமதி, தடையில்லாச் சான்று பெறுவதில் அதிக தாமதம் நிலவுகிறது. இதை எளிமைப்படுத்தும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. எனவே, மத்திய மின் சட்டம் 2022-ஐ திரும்பப் பெற்று, மாநில விநியோக உரிமத்தின்படி மலிவு விலையில் மக்களுக்கு மின் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ராய்கர்- புகளூர்- திருச்சூர் 800 கிலோவாட் மின் வழித்தட திட்டத்தை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம் புதுப்பிக்கவல்ல எரி சக்தியை அதிகம் பெறும் மாநிலங்கள் பயனடையும்.

இந்தியாவில் கடற்கரைக் காற்று மூலம் அதிக அளவில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட கடற்கரைப் பகுதிகளை தமிழ்நாடு கொண்டுள்ளது. எனவே, தமிழக கடற்கரை காற்று மூலம் கிடைக்கும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, தொடர் கண்காணிப்பு மூலம், சட்டம்-ஒழுங்கைப் பராமரித்து, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்து வருகிறது. எனினும், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான நிகழ்நேர தகவல்களை, தென் மாநில உளவுத் துறைத் தலைவர்கள் பகிர்ந்துகொள்வது அவசியம். அதன் மூலம் உளவுத் துறைத் தலைவர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட முடியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x