

தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருப்பதுபோல், அனைத்து கிராமங்களிலும் பொதுக்கழிவறை களை கட்டித்தர வேண்டும் என உத்தரப்பிரதேச அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய குடும்பநலத் துறையின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் உ.பி. மாநில அரசிற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகம் உட்பட தென் இந்திய மாநிலங்களின் கிராமங்களில் பெண்களுக்காக தனியாக பொதுக்கழிவறை இருப்பதாகவும் இது அங்குள்ள வர்களுக்கு பாதுகாப்பை அளிப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊரிலும், ஆறு இந்திய வகை மற்றும் ஒரு மேற்கத்திய வகை கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதியில் சுகாதாரம் மேம்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் கிராமப் பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டுள்ள இவைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு, உபியிலும் அனைத்து கிராமப்புறங்களிலும் பொதுக் கழிவறைகள் கட்டப்பட வேண்டும் எனவும் அக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தனி வீடுகளுக்கு கழிவறை கட்டுவதையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மே 27-ல் உபியின் பதான்யூவின் கிராமத்தில் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட இரு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு மறுநாள் மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு, அவர்கள் வீட்டில் கழிவறைகள் இல்லாமல் போனது முக்கியக் காரணம் என தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு, உபியில் ஆளும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான அரசுக்கு இதுபோல் ஒரு கடிதம் எழுதியுள்ளது.