

புவனேஸ்வரில் தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் மனோஜ் நாயக் காவல்துறையிடம் சரணடைந்தார்.
மனோஜ் நாயக்கையும், அவரது மனைவியையும் தேடப்படும் நபர்கள் என்று புவனேஸ்வர் - கட்டாக் காவல்துறை நோட்டீஸ் பிறப்பிக்க இருந்த நிலையில், முன்கூட்டியே அவர் சரணடைந்துள்ளார்.
கந்தகிரி காவல் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் சரணடைந்த மனோஜ் நாயக்கை போலீஸார் முறைப்படி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக புவனேஸ்வர் - கட்டாக் காவல் ஆணையர் குரானியா கூறும்போது, ''எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள்ளாகவே, தீ விபத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களைக் கைது செய்துள்ளோம். அதில் நான்கு பேர் புதன்கிழமை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை உரிமையாளர் மனோஜ் நாயக்கை தேடிக் கண்டறிய நோட்டீஸ் பிறப்பிக்கும் ஏற்பாடுகளில் இருந்தோம்.
புதன்கிழமை இரவு அவரின் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. போலீஸ் தரப்பில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ச்சியான தேடுதலால் அவராகவே முன்வந்து சரணடைந்துள்ளார். தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மருத்துவமனையின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்த மனோஜ் நாயக்கின் மனைவி சாஸ்வதி தாஸுக்கு எதிராகவும் மாயமானவர் பற்றிய விவரம் கோரும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இன்னும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. மனோஜ் நாயக் உடனான விசாரணையில் மருத்துவமனை நிர்வாகத்தில் அவர் மனைவியின் பங்கு என்ன என்பது தெரியவரும்.
தற்போது விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் கட்டமைப்பை ஆய்வு செய்து வருகிறோம். இதில் தொடர்புடைய அனைவரின் கூற்றுகளும் பதிவு செய்யப்படும். விபத்து தொடர்பாக 304, 308, 285 மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் சில பிரிவுகளைச் சேர்க்க வேண்டி வரும்.
மனோஜ் நாயக்கிடம், மருத்துவமனையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன் எனவும், அவரின் நிதி ஆதாரம் குறித்தும் விசாரித்து வருகிறோம்'' என்று அவர் கூறியுள்ளார்.
21 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. அங்குள்ள நீரிழிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் திங்கட்கிழமை இரவு திடீரென தீ விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் அங்கு சிக்கிக் கொண்டிருந்த சுமார் 106 நோயாளிகள் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தீ விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததும், நேர்மையான, விரைவு விசாரணை தேவை என மத்திய அரசு வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.