Last Updated : 15 Oct, 2016 11:16 AM

 

Published : 15 Oct 2016 11:16 AM
Last Updated : 15 Oct 2016 11:16 AM

இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் பாஜக: கட்சியின் தேசிய, மாநில தலைமையகங்களில் ஆய்வுநூலகம் திறக்க திட்டம்

இந்துத்துவா மற்றும் தனது கட்சியின் கொள்கைகளை உலகம் முழுவதிலும் பரப்பும் முயற்சியில் பாரதிய ஜனதா இறங்கியுள்ளது. இதற்காக கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைமை அலுவலகங்களில் ஆய்வு நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி, அசோகா சாலையில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஒரு நூலகம் திறக்கப்பட்டது. இதன்பிறகு அமித் ஷாவுக்கு உதித்த யோசனையின் பேரில் இதை ஆய்வு நூலகமாக நவீனமயமாக்குவதுடன் கட்சியின் மாநில தலைமை அலுவலகங்களிலும் இதுபோன்ற நூலகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை எந்த ஒரு தேசிய கட்சியிலும் இல்லாத வகையில் பல நவீன வசதிகளுடன் இந்த நூலகங்கள் அமைய உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் ‘ஆவணப்படுத்துதல் மற்றும் நூலகம்’ என்ற பிரிவின் நிர்வாகியும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஆசீர்வாதம் ஆச்சாரி செய்து வருகிறார். அப்பிரிவின் தலைவரான டாக்டர் அணில் ஜெயின் மற்ற நிர்வாகிகளான அனிர்பான் கங்குலி, சுனில் பாண்டே ஆகியோரும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “நம் நாட்டில் பாஜக மற்றும் இந்துத்துவா வளர்ச்சி குறித்து நாடு முழுவதிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்ய விரும்புகின்றனர்.

இதைக் கவனத்தில் கொண்ட அமித் ஷாவுக்கு நவீன நூலகங்கள் அமைக்கும் யோசனை எழுந்தது. அவரது நேரடிக் கண்காணிப்பில் அமைக்கப்பட்டு வரும் நூலகப் பணிகள் 2017-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். இதன்மூலம் பாஜக மற்றும் அதன் நிறுவனர்களின் கொள்கைகள் மற்றும் இந்துத்துவா கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்புவதே அவரது முக்கிய நோக்கம் ஆகும்” என்று தெரிவித்தனர்.

இம்மாத இறுதிக்குள் டெல்லியிலும் சத்தீஸ்கர் தலைநகரான ராய்பூரிலும் நூலகங்கள் அமைக்கப்படும். ராய்ப்பூரில் பாஜக தலைமையகத்தில் அமைக்கப்படும் நூலகத்தை நவம்பர் 8-ம் தேதி அமித் ஷா திறந்து வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, போபால், சண்டீகர், லக்னோ, பாட்னா, அகமதாபாத், மும்பை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் இந்த நூலகங்கள் திறக்கப்பட உள்ளன.

மாநில நூலகங்களில் அந்தந்தப் பகுதி இந்துத்துவா மற்றும் பாஜக தொடர்புடைய நூல்களும் இடம்பெறும். டெல்லி மற்றும் மாநில நூலகங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக இணைக்கப்பட உள்ளன. இதன் இணையதளத்தில் சுமார் 1500 டிஜிட்டல் நூல்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

கட்சியினர் மற்றும் ஆய்வாளர்கள் மட்டும் உறுப்பினராக இருக்கும் இந்த நூலகங்களில் பாஜக தொடர்புடைய செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களும் சேர்க்கப்பட உள்ளனர். டெல்லி பத்திரிகையாளர்களுக்கான உறுப்பினர் அட்டையை தேசிய தலைமையக விழா ஒன்றில் அமித் ஷா வழங்க உள்ளார். இதேபோல் மாநில நூலகங்களிலும் பத்திரிகையாளர்களுக்கு அதன் தலைவர் வழங்குவார்.

இவற்றில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக், ஜனசங்கம் (பாஜகவின் பழைய பெயர்) உருவானது முதல் இன்றுவரை நடந்த நிகழ்ச்சிகள், இவற்றில் தலைவர்களின் சொற்பொழிவுகள் உட்பட அனைத்தும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x