Published : 01 Sep 2022 06:21 AM
Last Updated : 01 Sep 2022 06:21 AM

ஜொமோட்டோவின் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' திட்டம் - இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்

சென்னை: ஜொமோட்டோ, புதிதாக 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது.

அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து ஸ்பெஷல் உணவுகளை மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யப்படும் என்று ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில், "கொல்கத்தாவில் இருந்து ரசகுல்லா, ஹைதராபாத்தில் இருந்து பிரியாணி, பெங்களூரில் இருந்து மைசூர் பாக், லக்னோவில் இருந்து கபாப், டெல்லியில் இருந்து பட்டர் சிக்கன் போன்ற தனித்தன்மை கொண்ட உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்து ருசிக்க இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் திட்டம் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு, குர்கான் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவையை பெற முடியும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து விரைவில் நாடு முழுவதும் இந்த சேவையை விரிவுபடுத்த ஜொமோட்டோ திட்டமிட்டுள்ளது. குர்கான் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்கள் ஆர்டர் செய்ய வேண்டிய நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூர், மதுரா, சென்னை, ஆக்ரா மற்றும் புவனேஸ்வர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு நகரத்தில் இருக்கும் எல்லா உணவகங்களும் காட்டப்படுவதில்லை. என்றாலும் நகரின் சில பழமையான மற்றும் பேமஸ் உணவகங்கள் மட்டும் டெலிவரிக்கு அனுமதிக்கப்படுகின்றன.

உணவு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது?

இந்த ஸ்கீம் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு உணவகங்களில் புதிதாக தயார் செய்யப்பட்டு விமானம் மூலம் அனுப்பப்படும். விமானப் பயணத்தின் போது உணவு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏதுவாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் சேதமடையாத அதிநவீன மொபைல் குளிர்பதன தொழில்நுட்பம் கொண்ட பாக்ஸ்களில் உணவு பேக் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் உணவைப் பெற்றவுடன் மைக்ரோவேவ், ஏர்-ஃப்ரை அல்லது பான்-ஃப்ரை மூலம் உணவை சூடுபடுத்தி கொள்ளலாம் என்று ஜொமோட்டோ விளக்கமளித்துள்ளது. அடுத்து சில வாரங்களில் இந்த சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x