

பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் என்பதற்காக உத்தரப் பிரதேசத்தின் நொய்டா பூங்காவில் உள்ள யானைகளின் சிலைகள் திடீரென திரையிட்டு மூடப்பட்டன. இதற்கான உத்தரவு இல்லாமலே இதை செய்ததாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 சட்டமன்றத் தேர்தலின்போது மாநில முதல்வராக இருந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி. இவரது கட்சியின் சின்னம் யானை என்பதால் அவர் நொய்டா மற்றும் லக்னோவின் அம்பேத்கர் அரசு பூங்காக்களில் அமைத்த யானை சிலைகளை திரையிட்டு மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மக்களவை தேர்தலின் பெயரில் கடந்த வாரம் நொய்டாவில் மட்டும் இந்த யானை சிலைகள் திடீரென திரையிட்டு மூடப்பட்டன. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.ராஜ்மோகன் அதிர்ச்சி அடைந்தார். இதற்கான உத்தரவை மத்திய தேர்தல் ஆணையமோ அல்லது மாநில தேர்தல் ஆணையமோ பிறப்பிக்கவில்லை.
எனவே உரிய உத்தரவின்றி மூடப்பட்ட யானை சிலைகளின் திரைகளை விலக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இத்துடன் சிலைகளை திரையிட்டு மூட உத்தரவிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தவும் நொய்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தி இந்துவிடம் நொய்டா மாவட்ட நிர்வாகம் கூறுகையில், ‘உத்தரவு எங்கிருந்து வந்தது என்பதை அறிவிக்காமலே திடீரென ஒரு கோப்பினை தயார் செய்து திரைகளால் யானை சிலைகளை மூடி விட்டனர். ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தூண்டுதலால் அரசுக்கு வேண்டிய ஓர் அதிகாரி இதை செய்துள்ளார்.’ எனத் தெரிவித்தனர்.
கடந்த 2007-ல் நான்காவது முறையாக உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதன் வெற்றியை குறிக்கும் வகையில் அம்பேத்கர், கட்சியின் நிறுவனர் கான்ஷிராம், கட்சி சின்னமான யானை, மாயாவதி மற்றும் அவரது பெற்றோர் ஆகியோரின் முழு உருவச் சிலைகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து லக்னோ, நொய்டா மற்றும் கௌதமபுத்தர் பல்கலைக்கழக வளாகம் ஆகியவை உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 300 சிலைகள் அமைக்கப்பட்டன. இதில் மாயாவதிக்கு மட்டும் கல் மற்றும் உலோகம் சேர்த்து 15 உருவச் சிலைகள் உள்ளன.
இந்த சிலைகளுடன் அமைக்கப்பட்ட பூங்காக்களின் மொத்த மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய். அவைகளைப் பராமரிக்கும் செலவு வருடத்திற்கு ரூ.80 கோடி. தற்போது யானைகளை திரைகளால் மூடி திறந்தமைக்கு ஆன செலவு சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் ஆகும்.