Published : 01 Sep 2022 12:52 AM
Last Updated : 01 Sep 2022 12:52 AM

பிஹார் | பதவியேற்ற 15 நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிங்

பாட்னா: பிஹாரில் பதவியேற்ற 15 நாளில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங்.

பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றனர். இதன்பின் கடந்தமாதம் 16ம் தேதி பிஹார் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 31 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இவர்களில் 16 பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வர்கள். சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற கார்த்திகேய சிங் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடத்தல் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி சரணடைய வேண்டும். ஆனால், அதே நாளில் இவர் சட்ட அமைச்சராக பதவியேற்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு பில்டர் ஒருவரை கொலை செய்வதற்காக அவர் கடத்தப்பட்டுள்ளார். இதில் கார்த்திகேய சிங் உட்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அமைச்சராக பதவியேற்ற இரண்டாவது நாளில் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது சர்ச்சையானது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கார்த்திகேயா சிங் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தினர்.

போராட்டங்களுக்கு நடுவே, நேற்று பிஹார் அமைச்சரவையை மாற்றியமைத்தார் முதல்வர் நிதிஷ்குமார். அதன்படி, சட்டத் துறை அமைச்சராக இருந்த கார்த்திகேய சிங் கரும்பு மற்றும் தொழில் துறை அமைச்சராக மாற்றப்பட்ட்டார். அவருக்குப் பதிலாக கரும்பு மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த ஷமீம் அகமது சட்டத்துறைக்கு மாற்றப்பட்டார். இந்த மாறுதல் பிடிக்காத கார்த்திகேய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்க, ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளிக்க இப்போது கரும்பு மற்றும் தொழில் துறை அம்மாநிலத்தின் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் அலோக் குமாருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற 15 நாள்களில் அமைச்சர் பதவியை கார்த்திகேய சிங் ராஜினாமா செய்துள்ளது பிஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x