Published : 31 Aug 2022 07:24 AM
Last Updated : 31 Aug 2022 07:24 AM

ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் ஜேஎம்எம், காங். எம்எல்ஏக்கள் சத்தீஸ்கரில் முகாம்

ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் முதல்வரின் பெயரில் குவாரி ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தலைமை தேர்தல் ஆணையம், கடந்த 25-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பெய்ஸுக்கு தனது பரிந்துரையை அனுப்பி வைத்தது. முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் ஆளுநர் தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக எம்எல்ஏக்களை பாதுகாக்க முதல்வர் ஹேமந்த் சோரன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 27-ம் தேதி கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஜார்க்கண்டின் லத்ராத்து அணைப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்றிரவே அவர்கள் தலைநகர் ராஞ்சிக்கு திரும்பினர். இந்தச் சூழலில் ஜேஎம்எம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று விமானம் மூலம் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதல்வர் ஹேமந்த் சோரன் விமான நிலையம் வரை சென்று அவர்களை வழியனுப்பி வைத்தார். ராய்ப்பூரில் உள்ள மேபேர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்குர், மாநில பொறுப்பாளர்கள் அவினாஷ் பாண்டே, சந்தோஷ் பாண்டே ஆகியோரும் ராய்ப்பூர் சென்றுள்ளனர். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் வரையில் எம்எல்ஏக்கள் ராய்ப்பூரில் தங்க வைக்கப்படுவார்கள். முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டால் அவரது மனைவி கல்பனா அல்லது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாபுலால் மராண்டி விவகாரம்

கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி, கட்சியை பாஜகவுடன் இணைக்க முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரதீப் யாதவ், பிந்து திர்கே ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறினர். பின்னர் இருவரும் காங்கிரஸில் இணைந்தனர். கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான பாபுலால் மராண்டி தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.

இந்த சூழலில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பாபுலால் மராண்டி குறித்து சபாநாயகர் ரவீந்திர நாத் மஹதோ விசாரணை நடத்தினார். இறுதிகட்ட விசாரணை நேற்றுடன் முடிந்தது. சபாநாயகர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x