

வனப்பகுதிகளில் தொன்றுதொட்டு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்கக் கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்தால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று தேசிய பழங்குடியின திருவிழா முதல் முறையாக நடந்தது. இந்நிகழ்ச் சியைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இயற்கை வளங்கள் பெரும்பாலும் வனப்பகுதிகளில் தான் கொட்டிக் கிடக்கின்றன. அங்கு பழங்குடியின மக்கள் தான் அதிக அளவில் வசித்து வருகின்றனர். வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்போது இயற்கை வளங்களைச் சுரண்டி, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடக் கூடாது. இரும்பு தாதுக்கள், நிலக்கரி ஆகியவை நாட்டுக்கு அவசியம் தான். அதேசமயம் அவற்றை எடுக்கும்போது பழங்குடியின மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கக் கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வாய்ப்பு யாருக்கும் அளிக்கப்படவில்லை. ஒருவேளை அவர்களது உரிமைகளைப் பறிக்க நினைத்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை வளங் களுக்கு தீர்வை விதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வருவாய் பழங்குடியின நலன்கள், உட்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை பெருக்குவது ஆகிய பணிகளுக்காக தற்போது செலவிடப்பட்டு வருகிறது.
சுரங்கப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுச்சூழல் மாசு அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். பழங்குடியின உற்பத்தி பொருட்கள் சந்தைகளில் விற்பதன் மூலம் அவர்களது பொருளாதாரமும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.