

கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது தலச்சேரி. இதன் அருகில் பினராயி நகர் உள்ளது. இதுதான் முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊர். இங்குள்ள பெட்ரோல் பங்க்குக்கு நேற்று காலை 10.30 மணிக்கு இளைஞர் ஒருவர் வாகனத்தில் வந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
அதில் இளைஞரின் தலை, கழுத்துப் பகுதிகளில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் இறந்தவரின் பெயர் ரமித் (25), பாஜக தொண்டர் என்பது தெரியவந்தது. இந்தக் கொலைக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்று உள்ளூர் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கொலை நடந்த இடத்தை வயநாடு போலீஸ் கண் காணிப்பாளர் (கண்ணூர் மாவட்ட கண்காணிப்பாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.) கே.கார்த்திக் நேரில் ஆய்வு செய்தார்.
ரமித்தின் தந்தை சோடான் உத்தமன். இவர் பேருந்து ஓட்டுநராக வேலை செய்தார். பாஜக தொண்டர். கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் கண்ணூர் அருகில் உள்ள கீழூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இப்போது அவரது மகன் ரமித்தும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் தொண்டர் மோகனன் (40) என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் பத்திரியாட் பகுதியில் வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. அதற்கு பழிக்குப் பழியாக பாஜக தொண்டர் ரமித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வரின் சொந்த ஊரான பினராயியில் பட்டப்பகலில் அரசியல் கட்சியினர் கொலை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. மேலும் இன்று 1 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.