

ராஞ்சி: வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு வருடமாக சித்ரவதை செய்த பாஜகவைச் சேர்ந்த நபர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தான் தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்றா பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சூடான பாத்திரங்களை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் பணிப்பெண்ணை சீமா பத்ரா தாக்கியுள்ளார். இரும்பு கம்பி கொண்டு தாக்கி சுனிதாவின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அறையில் அடைக்கப்பட்ட நிலையில் சுனிதா மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதும் அவரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுனிதா ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பட்ராஸ் பகுதியில் உள்ள சீமா பத்ரா வீட்டில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார். சில காலம் சீமா பத்ராவின் மகள் வத்சலா பத்ராவின் டெல்லி வீட்டில் பணிபுரிந்துள்ளார். டெல்லியில் இருந்து வத்சலா பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு திரும்பியவர், சீமாவின் வீட்டில் பணிபுரிந்துள்ளார்.
அப்போது இருந்து அவர் சீமா பத்ராவிடம் இருந்து சித்ரவதைகளை சந்தித்துள்ளார். சுனிதா தற்செயலாக வீட்டை வெளியே செல்ல நேர்ந்தால், அவர் சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அந்த அளவுக்கு கொடுமைகளை எதிர்கொண்டுள்ளார்.
சீமாவின் மகன் ஆயுஷ்மான் சுனிதாவுக்கு உதவ முயன்று ஜார்க்கண்ட் அரசாங்கத்தில் பணியாளர் துறை அதிகாரியாக இருக்கும் அவரது நண்பர் விவேக் பாஸ்கி வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவிக்க இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. இப்போது சீமா மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.