பாக். கலைஞர்களுக்கு ஆதரவு பேச்சு: சல்மான் கான் உருவ பொம்மை எரிப்பு
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவாகப் பேசிய பாலிவுட் நடிகர் சல்மான் கானின் உருவ பொம்மையை உத்தரப் பிரதேச பாஜகவினர் எரிந்தனர்.
"பாகிஸ்தான் கலைஞர்களை தீவிரவாதிகள் போல் நடத்த வேண்டாம்" என்று, சல்மான் கான் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். சல்மான் கானின் இந்தப் பேச்சை எதிர்த்து பாஜகவினரும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவரான ராஜ் தாக்ரேவும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோமின் ஆதரவாளர்கள் இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவாகப் பேசிய சல்மான் கானை கண்டிக்கும் வகையில் சல்மான் கானின் உருவ பொம்மையை எரித்தனர்.
மேலும் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவாகப் பேசும் பாலிவுட் திரை நட்சத்திரங்களின் படங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, இந்தியாவின் உரி மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கிருந்த இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலை அடுத்து இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் வர தடை விதிக்கப்பட்டது.
