

புதுடெல்லி: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதற்கு எதிரான வழக்கை கடந்த மார்ச் 15ம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்'' என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், ‘‘ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துக் கொள்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மத விவகாரத்தில் நீதிமன்றமும் அரசும் தலையிட முடியாது. அரசமைப்பு வழங்கிய உரிமையை பறிக்கும் விதமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது''என வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரலில் இருந்து 6 முறை மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இவ்வழக்கை விசாரிக்க தனி அமர்வை அமைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது நிஜாமுதீன் பாஷா, ''இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரித்தால்தான் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு மீண்டும் செல்ல முடியும். மாணவிகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்''என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஹிஜாப் தடை குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்த பின்னர் வழக்கின் விசாரணை குறித்து முடிவெடுக்கலாம்''என்றனர். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, '' நோட்டீஸை ஏற்கிறோம்''எனக்கூறியதை தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.