

கடந்த பிப்ரவரி மாதம் இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 3 வழக்கு களை சிபிஐ பதிவு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் வகையில், இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் தங்களைச் சேர்க்கக் கோரி, ஹரியாணா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜாட் சமூகத்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதில் வன்முறை வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். மாநில நிதியமைச்சர் அபிமன்யூவின் வீடு தீவைத்து கொளுத்தப்பட்டது. போலீஸாரின் ஆயுதங்கள் சூறையாடப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொது, தனியார் சொத்துக்கள் நாசமாகின.
வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை ஹரியாணா மாநில அரசு சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, வன்முறை தொடர்பாக 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
ரோடாக் நகரில் பிப்ரவரி 19-ம் தேதி ஹரியாணா மாநில நிதியமைச்சரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான கொலை முயற்சி தொடர்பாக தனி வழக்கும், டெல்லி பைபாஸ் சாலையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஹரியாணா காவல் துறையினரின் ஆயுதங்கள் சூறையாடப்பட்டு, கொலை முயற்சி நடந்ததாகவும் தனித்தனி வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.