

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றிக் கொண்ட்டாட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்த பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மறுத்த வீடியோ எதிர்க்கட்சியினரால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி, ஜடேஜா, ஹர்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றிக் கொண்ட்டாட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்த பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மறுத்த வீடியோ எதிர்க்கட்சியினரால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் ஒருவர், "இதுவே பாஜகவைச் சாராத நபர் ஒருவர் இந்தியக் கொடியை ஏந்த மறுத்திருந்தால் பாஜக தொழில்நுட்ப பிரிவு சுறுசுறுப்பாகி சம்பந்தப்பட்ட நபரை தேச விரோதி என்று கூறியிருக்கும். மோடி ஆதரவு ஊடகங்களுக்கு நாள் முழுவதும் விவாத மேடைகளை நடத்தியிருக்கும். அதிர்ஷ்டவசமாக அது ஷாஹின்ஷாவின் (பேரரசரின்) மகன் ஜெய் ஷா ஆகிவிட்டார்" என்று கிண்டல் தொனியில் பதிவிட்டுள்ளார்.
ஜெய் ஷா பிசிசிஐ தலைவராகவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வீடியோவைப் பகிர்ந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியும், உள் துறை அமைச்சரின் மகன் ஏன் தேசியக் கொடியை ஏந்த மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.