

இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். உ.பி.யின் புதானாவில் ராமலீலா நாடகத்தில் நவாசுதீன் சித்திக் நடிப்பதாக இருந்தது. சொந்த ஊரில் மேடையில் நடிப்பது அவரின் சிறு வயது கனவாகவும் இருந்தது. இந்நிலையில், நவாசுதீன் முஸ்லிம் என்பதாலும், அவர் மீது வரதட்சிணை கொடுமை வழக்கு இருப்பதாலும் அவர் ராமலீலாவில் நடிக்கக் கூடாது என சிவசேனா தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் விலக்கப்பட்டார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ராமலீலா நாடகத்தில் தான் நடிப்பது உறுதி என நவாசுதீன் சித்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில், “எனது சிறுவயது கனவு நிறைவேறவில்லை. ஆனால் நிச்சயமாக அடுத்த ஆண்டு ராமலீலாவில் நான் நடிப்பேன். எனது ஒத்திகைப் படங்களைப் பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
ராவணனின் தாய்மாமன் மாரீசனாக வேடமிட்டு ஒத்திகையில் ஈடுபட்டுள்ள வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.
நவாசுதீனின் தம்பி மனைவி, நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது காவல் துறையில் வரதட்சணைப் புகார் அளித்துள்ளார்.