Published : 05 Jun 2014 11:53 AM
Last Updated : 05 Jun 2014 11:53 AM

மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: நரேந்திர மோடி எம்.பி.யாக பதவியேற்றார்

16-வது மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட புதிய உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில், விபத்தில் உயிரிழந்த அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டது.

2-வது நாளாக வியாழக்கிழமை நாடாளுமன்றம் கூடியது. அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய உடையில் அவைக்கு உற்சாகமாக வந்திருந்தனர். சில எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நடன மாடினர். சிலர் பாட்டுப் பாடினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவைக்கு வந்தபோது பிரதமர் நரேந்திரமோடி வணக்கம் தெரிவித்தார். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனை வரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்தியில் பதவியேற்ற பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை நிற குர்தா, பைஜாமா வில் கம்பீரமாக வந்தார். அவையில் முதல் நபராக இந்தியில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அடுத்து பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் இந்தியில் பதவியேற்றுக் கொண்டனர்.

சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, ஹர்ஷவர்தன் ஆகியோர் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடகாவைச் சேர்ந்த சதானந்த கவுடா, அனந்தகுமார் ஆகியோர் கன்னடத்தில் பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றனர்.

அனைத்து உறுப்பினர் களுக்கும் மக்களவை தற்காலிக தலைவர் கமல்நாத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். வியாழக்கிழமை இரவு வரை உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியில் பதவியேற்றனர். வெள்ளிக்கிழமையும் பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்கிறது.

539 உறுப்பினர்கள் மட்டுமே பதவியேற்பு

மக்களவையின் மொத்த பலம் 543. இதில் தற்போது 539 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி, வடோதரா தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் வடோதரா தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் மெயின்பூரி, ஆசம்கர் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதில் மெயின்பூரி தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தெலங்கானா முதல்வராகப் பதவியேற்றிருப்பதால் மேடக் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய கிராம வளர்ச்சி அமைச்சர் கோபிநாத் முண்டே டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்ததால் அவரின் பீட் தொகுதி காலியாக உள்ளது. எனவே மொத்தம் 539 உறுப்பினர்கள் மட்டுமே பதவியேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x