

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 3 போலி கால் சென்டர்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன் தினம் மேலும் 4 போலி கால் சென்டர்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அமெரிக்காவில் வசிக்கும் பணக்காரர்களைக் குறிவைத்து அந்நாட்டின் வருமான வரித் துறை அதிகாரிகள் போல தொலைபேசி மூலம் பேசி நடித்து, தானேவில் இயங்கி வந்த 3 போலி கால் சென்டர்கள் ரூ.500 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட தகவல் அண்மையில் அம்பலமானது. இதைத் தொடர்ந்து அந்த கால் சென்டர்களில் பணியாற்றி வந்த 70 ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இரு கால் சென்டர்களின் இயக்குநர்களையும் தீவிரவமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தானேவின் மிர்ரா சாலையில் இயங்கி வந்த மேலும் 4 போலி சென்டர்களில் தானே போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை பாதிக்கும் என்பதால் அவர் குறித்த தகவல்களை போலீஸார் வெளியிடவில்லை. முன்னதாக போலீஸார் வருவதைத் தெரிந்து கொண்ட அந்த கால் சென்டர் ஊழியர்களும், உரிமையாளர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வெறிச்சோடிக் கிடந்த அந்த கால் சென்டர்களில் இருந்து 250 கம்ப்யூட்டர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்குகளை மட்டும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில் அமெரிக்கர்களை ஏமாற்றிய மோசடியில் தொடர்புடைய முக்கிய நபர், குஜராத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை குஜராத் விரைந்துள்ளது.