

எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி தொடர்ந்து நான்காவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் கத்துவா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே 15 நிமிடங்கள் சண்டை நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்" என்றார்.
அதேபோல் இந்தியத் தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இத்தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
31 முறை தாக்குதல்:
கடந்த 29-ம் தேதி இந்திய ராணுவம் துல்லிய திடீர் தாக்குதல் நடத்திய பின்னர் பாகிஸ்தான் ராணுவம் 31 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) பிம்பர் கலி பகுதி, ரஜோரி பகுதிகளில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. கத்துவா பகுதியில், தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
இந்நிலையில், இன்று தொடர்ந்து நான்காவது நாளாக பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறியிருக்கிறது.