பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: மேலும் ஒரு படைவீரர் பலி

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: மேலும் ஒரு படைவீரர் பலி
Updated on
2 min read

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ். புரா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில், எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சுஷில் குமார் (47) பலத்த காயமடைந்தார். ஜம்மு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ரா பகுதியைச் சேர்ந்த சுஷில் குமாருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து மீறிவரும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில், எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் இறந்த 48 மணி நேரத்துக்குள்ளாகவே மற்றொரு வீரரும் உயிரிழந்துள்ளார்.

கதுவா மாவட்டத்தின் ஹிரா நகர் செக்டார், பாபியா பகுதி, சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய நிலைகள் மீது அக்டோபர் 21-ம் தேதியன்று பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. சிறிய மற்றும் தானியங்கி ஆயுதங்கள், 82 மி.மீ. பீரங்கிக் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 15 நிமிடங்கள் நீடித்தது. இதில் குர்னாம் சிங் என்ற பிஎஸ்எப் வீரர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பிஎஸ்எப் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேரும், தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டதாக பிஎஸ்எப் தெரிவித்திருந்தது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி இதுவரை 32 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

பிஎஸ்எப் தலைமைக் காவலர் சுஷில் குமார்

ராஜ்நாத் சிங் அஞ்சலி

இந்நிலையில், பஹ்ரைனில் இருந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''ஆர்.எஸ். புரா பகுதியில் நடந்த சண்டையில் தன் உயிரை நீத்த எல்லைப் பாதுகாப்பு வீரர் சுஷில் குமாரின் தைரியத்துக்கும், தியாகத்துக்கும் என்னுடைய வீர வணக்கங்கள். எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநரிடம் எல்லைப் பகுதிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்தேன். பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க பிஎஸ்எப் எப்போதும் தயாராக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in