பதவி விலகலை ஆளுநர்களே முடிவு செய்யலாம்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து

பதவி விலகலை ஆளுநர்களே முடிவு செய்யலாம்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து
Updated on
1 min read

ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதில் தொடர்வதா அல்லது பதவியை விட்டு விலகிவிடுவதா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று முன்னாள் மத்திய அமைச் சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக தலைமை யிலான அரசு பதவியேற்ற பின்பு காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட சில மாநில ஆளுநர்களின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ப.சிதம்பரம் மூலம் காங்கிரஸ் கட்சி தனது கருத்தை ஆளுநர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியது:

தவறு நடந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஆளுநர்கள் பதவி விஷயத்தில் தலையீடு இருக்கும் என்பது பொதுவானது. எனினும் இப்போது சிலர் தாமாகவே பதவி விலக முன்வந்துள்ளனர். சிலர் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை தொடர விரும்புகின்றனர்.

நான் பிரதமராக இருந்தால், இந்த இரு முடிவுகளையுமே ஏற்றுக் கொள்வேன்.

2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப்பின் ஆளுநர்களை பதவி நீக்கும் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆளுநர்கள் மற்றும் அரசு அமைப்புகளின் தலைவர்களை பதவி விலகக் கூறுவதை பாஜக தலைமையிலான அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, ஆளுநர்கள் உள்பட எத்தனை பேரை பதவி விலகுமாறு கூறியுள்ளனர் என்பது எனக்குத் தெரியாது என்று சிதம்பரம் பதிலளித்தார்.

நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். இதன் பிறகு செய்தியாளக்களை சந்தித்த அஸ்வினி குமார், பதவி விலகுமாறு மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த உத்தரவும் வரவில்லை. அப்படி எதாவது உத்தரவு வந்தால் அதன்படி நடப்பேன் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in