

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இன்று (வியாழக்கிழமை) எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஜித்தேந்தர் குமார் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லையோரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஜிந்தேந்தர் குமார் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்திருக்கிறார்.
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லையோரத்தில் அமைந்துள்ள குடிமக்கள் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது" என்றார்.
எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறிவரும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.