

மகாராஷ்டிர மாநிலத்தில், அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் மராட்டியர் களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய அரசின் முடிவு வரும் 20-ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
சமூக-பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள மராட்டியர் (மராத்தா) சமூகத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மராட்டிய சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசு, தொழிற்துறை அமைச்சர் நாராயண் ராணே தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்தது. அக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலவைக் கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசின் முடிவு வரும் 20-ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும்” என அமைச்சர் நாரயண் ராணே பதிலளித்தார்.
சட்ட மேலவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மகாராஷ்டிர மக்கள் தொகையில் 31.5 சதவீதம் உள்ள மராத்தா குன்பிஸ் இனத்தவர்கள், விதர்பா மற்றும் கொங்கன் பகுதியில் அதிக அளவு வசித்து வருகின்றனர். மராத்தா இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
20 சதவீத இடஒதுக்கீடு மராத்தா வகுப்பினருக்கு வழங்கப்பட்டால், அது மற்ற பின்தங்கிய சமூகத்தினரைப் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்