

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமை சீரடைந்து வருவதை அடுத்து, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் 99-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்ட நாள் முதலாக ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.
இந்தச் சூழலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை சம்பவங்கள் குறைந்து நிலைமை மெல்ல சீரடைந்து வருவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. அதே சமயம் கும்பல் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.
3 மாதங்களுக்கு பிறகு, நேற்று முன் தினம் இரவு முதல் மொபைல் சேவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இணையதள சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் 99-வது நாளாக நேற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்படைந்தது.