ராணுவத்துக்கு இந்தி படக்குழு ரூ.5 கோடி நன்கொடை: ராஜ்தாக்கரே நிபந்தனையால் சர்ச்சை தீவிரம்

ராணுவத்துக்கு இந்தி படக்குழு ரூ.5 கோடி நன்கொடை: ராஜ்தாக்கரே நிபந்தனையால் சர்ச்சை தீவிரம்
Updated on
2 min read

உரி தாக்குதலை அடுத்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, 'ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் பாகிஸ்தான் நடிகரைப் பயன்படுத்தியதற்காக ராணுவ நல வாரியத்துக்கு ரூ.5 கோடி அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது பாலிவுட் திரையுலகம் மற்றும் அரசு தரப்பில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடற்படைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் இதற்கு பதிலளித்துப் பேசும்போது, ''ராணுவத்துக்கு நன்கொடை வழங்குவது என்பது, அடிப்படையில் ஒரு தன்னார்வ நடவடிக்கையே. ராணுவ அமைச்சகம் யாரோ ஒருவர், மற்றொருவரை நன்கொடை அளிக்கச்சொல்லிக் கட்டாயப்படுத்துவது குறித்து யோசிக்கவில்லை'' என்றார்.

குறிப்பாக, இது அடிப்படையான தன்னார்வ நன்கொடைதான் எனவும் இந்த விஷயத்தில் யாரும், யாருடைய கழுத்தையும் பிடித்து நன்கொடை கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

என்ன சர்ச்சை?

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கியுள்ள திரைப்படம், 'ஏ தில் ஹே முஷ்கில்'. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் நடித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள், அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி, பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் திரையரங்குகளை சூறையாடுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.

இதையடுத்து, மாநில முதல்வர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்வருடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, ''உரி தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வாசகம் திரையிடப்படும், இனி எதிர்காலத்தில் பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணியாற்ற மாட்டோம் என்றெல்லாம் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இப்படத்தை நாங்கள் அனுமதிக்கிறோம்.

இப்படத்தில் பாகிஸ்தான் கலைஞர்களைப் பயன்படுத்தியதற்காக படக்குழு, ராணுவ வீரர்கள் நலநிதிக்கு ரூ.5 கோடி அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இக்கருத்துக்கு ராணுவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என ராணுவ வட்டாரம் தெரிவித்திருந்தது. அத்தோடு “ராணுவ நல நிதிக்கு தாமாக முன்வந்து நன்கொடை வழங்கினால் ஏற்றுக் கொள்வோம். வறுபுறுத்தல் அல்லது மிரட்டல் காரணமாக வழங்கப்படும் நிதியை ஏற்க மாட்டோம்” என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு சிறப்பு நிதி

பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து தற்போது, போரில் உயிரிழந்தவர்களுக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட உள்ளது.

இதுகுறித்துப் பேசிய பாரிக்கர், ஒவ்வொரு வீரரும் அதில் சமமாகத் தொகையைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ராணுவ அமைச்சகம் திட்டம் வகுக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிர முதல்வர் எதிர்ப்பு

இந்நிலையில் ராணுவ நல நிதிக்கு படக்குழுவினர் ரூ. 5 கோடி 'கட்டாய' நன்கொடை வழங்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்.

இதுகுறித்துப் பேசிய ஃபட்நாவிஸ், ''தாக்கரேயின் மூன்று கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்தேன். ரூ. 5 கோடி சர்ச்சை எழுந்தபோது நான் குறுக்கிட்டு, திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் இதற்கு ஒத்துக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினேன். நன்கொடை விருப்பத்துடன் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினேன். ஆனால் படக்குழு ரூ. 5 கோடியை அளிப்பதற்குச் சம்மதம் அளித்து விட்டது'' என்று கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > >'ஏ தில் ஹே முஷ்கில்'- ராணுவ நலநிதிக்கு ரூ.5 கோடி அளிக்க கோருவதற்கு தேவேந்திர பட்நாவிஸ் எதிர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in