

கர்நாடக அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலனைக் காக்கும் வகையில் சிகை திருத்தும் கடைகளைத் (சலூன்) திறக்க அம்மாநில சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஆர்.ரமேஷ் குமார் கூறியதாவது:
பண்டைய காலங்களில் சிகை திருத்துநர்கள் வைத்தியர்களாகவும் இருந்தனர். சவரக்கத்தியை கொண்டே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகை திருத்துவோரின் மனைவிகள் பிரசவம் பார்ப்பவர்களாக இருந்துள்ளனர்.
தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி, மீசையுடன் சோகமாக காணப்படுகின்றனர். அவர்களின் இந்த தோற்றம் உளவியல் ரீதியாக நோயாளிகளை குணமாக்குவதில் இடையூறாக இருக்கிறது.
எனவே, நோயாளிகளின் நலனைக் காக்க கர்நாடக அரசு மருத்துவமனை வளாகங்களில் சிகைத் திருத்தும் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து மாவட்ட மற்றும் தாலுகாக்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகை திருத்தும் கடைகள் திறப்பதற்கான பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளோம்.
இதன் மூலம் நோயாளிகள் தொற்று ஏற்படாதவாறு, சுத்தமாக பராமரிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் நோயாளிகளின் மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும்''என்றார்.
கர்நாடக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கைக்கு நோயாளிகள் மத்தியிலும், சிகைத் திருத்தும் தொழிலாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.