

“இதுவரை நம் ராணுவத்தின் தீரத்தை ஒருவரும் சந்தேகித்ததில்லை. ஆனால் சமீபமாக ஒரு சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு எல்லையருகே பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரங்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய மனோகர் பரிக்கர், ஆதாரங்களைக் கேட்கும் நபர்களின் விசுவாசத்தை கேள்விக்குட்படுத்தினார்.
அந்தத் தாக்குதல் “100% துல்லியமான தாக்குதல்” என்றார் மனோகர் பரிக்கர். ஆனால் இந்தத் தாக்குதலைச் சந்தேகிக்கும் ‘சில பேர்களின்’ தேசப்பற்று குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மனோகர் பரிக்கர் எச்சரித்தார்.
“இதுவரை ஒருவரும் இந்திய ராணுவத்தின் தீரத்தை சந்தேகத்ததில்லை, ஆனால் சமீபமாக முதல் முறையாக சிலர் சந்தேகிக்கின்றனர். இவர்களின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை” என்றார்.
சிஎன்என் நியூஸ்18 சேனலின் செய்தியை சுட்டிக்காட்டிய மனோகர் பரிக்கர், பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் துல்லியத் தாக்குதல் நடந்ததாக தெரிவித்ததையும் குறிப்பிட்டு, “இதற்குப் பிறகும் எந்த ஒரு வீடியோவையோ, ஆதாரங்களையோ வெளியிட வேண்டிய அவசியமில்லை” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “தேவைப்பட்டால் எல்லையில் பணியாற்றத் தயார் என்று முன்னாள் ராணுவத்தினர் பலரும் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். நான் அவர்களை வணங்குகிறேன். நம் தேசத்திற்கு இந்தப் பணிகளை செய்வதற்கான இருதயமும் தைரியமும் உள்ளது” என்றார்.