

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வுப் பணியில் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு காரணமாக ஆய்வுப் பணிகள் தடைபட்டுள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் (ஏஎஸ்ஐ) தென்னிந்திய அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. கீழடியில் கண்டெடுக்கப் பட்ட பொருட்களை இங்கு கொண்டு செல்வதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த 18-ம் தேதி கார்பன் பரிசோதனைக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், இப்பொருட்களை பெங்களூரு கொண்டுசெல்ல தடை விதித்தது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஏஎஸ்ஐ உயரதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “ஆந்திராவில் சமீபத்திய அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பெங்களூருவில் ஆய்வு செய்யப்பட்டு குறுகிய காலத்தில் ஆய்வறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. தற்போது கீழடியில் கண் டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை இங்கு அனுப்ப தடை ஏற்பட்டுள்ள தால் அதன் ஆய்வுகளும் முடங்கி யுள்ளன. ஏனெனில் பெங்களூருவில் தான் ஆய்வுக்கான முழு வசதியும் உள்ளது. இந்த அலுவலகத்தை கீழடிக்காக தமிழகம் மாற்றுவதும் இயலாத காரியம்” என்று தெரிவித்தனர்.
கீழடியில் கிடைத்த பொருட்கள் மாநில அரசு அல்லது வேறு எவரிடமும் ஒப்படைக்க இந்திய தொல்பொருள் ஆய்வகச் சட்டத்தில் இடமில்லை. இப்பொருட் களை வைத்து அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு இடம் அளிக்க முன் வந்துள்ளது. என்றாலும் இதில் மேலும் பல சிக்கல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் கீழடிப் பொருட்களை பெங்களுருவுக்கு அனுப்பி வைப் பதை தவிர வேறு வழியில்லை என ஏஎஸ்ஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏஎஸ்ஐ இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற ஹாஜி டாக்டர் சையது ஜமால் உசைன் இது தொடர்பாக ‘தி இந்து’விடம் கூறும்போது, “கீழடியில் அகழாய்வு எனது தலைமையில் தொடங்கப்பட்டது. எங்கள் துறையில் நாடு முழுவதும் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்க மறுப்பதே இதற்கு காரணம் ஆகும். கீழடிக்காக அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கினாலும் அதற்கு குறைந்தபட்ச அலுவலர் கள், பராமரிப்பு செலவை ஏற்பது யார் என்ற கேள்வி எழுகிறது. இந்த பிரச்சினைகளை சரிசெய்து முடிக்க பல ஆண்டுகள் ஆகிவிடும். இதனால் கீழடியின் ஆய்வுகள் முடங்குவதை தவிர வேறு எந்தப் பலனும் கிடைக்காது” என்றார்.
கீழடி பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டால் அதன் அறிக்கை சுமார் 2 ஆண்டுகளில் வெளியாகும் எனக் கருதப்படுகிறது. இந்த ஆய்வு அலுவலகம் சுமார் 10 ஆண்டு களுக்கு முன் சென்னையில் தொடங்க திட்டமிடப்பட்டது. அப் போது சென்னையில் இருந்த சில அதிகாரிகளின் சுயநலம் காரண மாக அது மைசூரில் தொடங்கப் பட்டது. பிறகு அங்கிருந்து பெங்களுருவுக்கு மாற்றப்பட்டது.