Last Updated : 30 Sep, 2016 03:24 PM

 

Published : 30 Sep 2016 03:24 PM
Last Updated : 30 Sep 2016 03:24 PM

அக்.4-க்குள் காவிரி மேலாண்மை வாரியம்; தமிழகத்துக்கு இன்று முதல் 6-ம் தேதி வரை நொடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை

வரும் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தமிழகத் துக்கு வரும் 6-ம் தேதி வரை நொடிக்கு 6,000 கனஅடி நீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீப மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். முதலில் இதற்கான ஒருங்கிணைப்பாளரை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்தக் குழுவில் காவிரி நீர்ப் பாசன மாநிலங்களான கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் சார்பாக இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை சனிக் கிழமை (இன்று) மாலை 4 மணிக்குள் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்துப் பணிகளை யும் வரும் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங் களிலும் காவிரி நீர்ப் பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

இதையடுத்துத் தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘இவ்வழக் கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.

நாரிமன் வாதிட மறுப்பு

கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன், ‘‘இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து ஏற்காமல் இருப்பதால், அவர்களுக்காக வாதிட விரும்பவில்லை. கர்நாடக அரசின் வழக்கறிஞராக ஆஜரானாலும், நானும் நீதியை நிலைநாட்டும் நீதிமன்ற அதி காரி என்பதால் இந்த முடிவை எடுத் திருக்கிறேன்.

அதே நேரத்தில் இவ்வழக்கு தொடர் பாக எனக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே நிகழ்ந்த கடித உரையாடலை நீதிமன்றத் தில் தெரிவிக்க இருக்கிறேன். சித்த ராமையா எனக்கு எழுதிய கடிதத்தில், ‘‘கர்நாடகச் சட்டப்பேரவையில் தமிழ கத்துக்குக் காவிரி நீரைத் திறக்க முடியாது எனத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தர விட்டபோதும் கர்நாடக மக்களின் நல னைக் கருத்தில் கொண்டு, நாங்கள் அதே முடிவில் தொடர இருக்கி றோம்’’என தெரிவித்துள்ளார்.

நான் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘சட்டப்பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றினாலும், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் உத்தரவை மதித்துத் நடக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத் துக்குக் காவிரி நீரைத் திறக்கும் வரை இவ்வழக்கில் கர்நாடக அரசின் தரப்பில் நான் எவ்வித வாதத்தையும் முன் வைக்க மாட்டேன்'' என தெரிவித்துள்ளேன்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘சட்டத் தையும், நீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசின் செயல்பாடு கண்டிக் கத்தக்கது. அரசியல் சாசனப் பிரிவு 144-ன்படி மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இந்தியக் கூட்டாட்சியில் ஒரு மாநிலமாக அங்கம் வகிக்கும் கர்நாடகா நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. கர்நாடகா தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுப்பது துரதிருஷ்டவசமானது.

கர்நாடக அரசு இறுதி எச்சரிக்கை யாக ஒரு வாய்ப்பை வழங்குகிறோம். வரும் 1-ம் தேதி (இன்று ) முதல் 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரைக் காவிரியில் திறந்துவிட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செய்துமுடிக்க உச்ச நீதி மன்றம் கடுமையான உத்தரவுகளை யும் பிறப்பிக்கத் தயாராக இருக்கி றது’’எனக் கூறி வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

நீதிபதி தீபக் மிஸ்ரா, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட் களுக்குள் அமைக்க வேண்டும் என கெடு விதித்து, மத்திய அரசுக்கு பல அழுத்தமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு குறித்து பிரதமர் ஆலோசனை

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களிடையே பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனிடையே மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை தெரிவிக்குமாறு 4 மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட் டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர் தெரிவித்தார். இது தொடர்பாக கர்நாடக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றோம். என்றாலும் இது தொடர்பாக முடிவு எடுக்க சனிக்கிழமை மாலை வரை எங்களுக்கு அவகாசம் உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x