Published : 26 Aug 2022 05:50 AM
Last Updated : 26 Aug 2022 05:50 AM

பஞ்சாப் பயணத்தில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு எஸ்.பி. காரணம் - 5 பேர் கொண்ட ஆய்வுக் குழு அறிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பயணம் செய்தபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு, பெரோஸ்பூர் சீனியர் எஸ்.பி தேவையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என உச்ச நீதிமன்றத்தில் 5 உறுப்பினர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி சென்றார். அவர் செல்லும் பாதையில் விவசாயிகள் திடீரென மறியல் செய்ததால், மேம்பாலம் ஒன்றில் பிரதமரின் வாகனம் 20 நிமிடங்கள் நின்றது. இதையடுத்து பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார்.

இதற்கு பஞ்சாபில் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மீது குற்றம் சாட்டிய பாஜக, பிரதமருக்கு எதிராக மிக மோசமான சதி செய்யப்பட்டுள்ளது என கூறியது. இதை அப்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மறுத்தார்.

இந்த சம்பவத்தில் குற்ற சதி எதுவும் உள்ளதா, இதில் பஞ்சாப் போலீஸாரின் பங்கு குறித்து விசாரணை நடத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

இந்தக் குழு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் தேவையான நடவடிக்கை எடுக்க பெரோஸ்பூர் சீனியர் எஸ்.பி தவறிவிட்டார். பிரதமரின் பயணப் பாதை குறித்து 2 மணி நேரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேவையான போலீஸ் படையினர் இருந்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அவர் தவறிவிட்டார்’’ என்று கூறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவதாகவும், அதன்பின் தேவையான நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது:

பஞ்சாப் பெரோஸ்பூரில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதற்கு முந்தைய அரசின் தவறு காரணம். அதே பஞ்சாப்தான் தற்போது பிரதமரை வரவேற்றுள்ளது. விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றது பஞ்சாப் மாநிலம். நீண்ட இடை வெளிக்குப் பின் பிரதமர் பஞ்சாப் வந்துள்ளார். அவர் பஞ்சாப் மாநிலத்துக்கு தயக்கமின்றி மானியங்களை அளித்துள்ளார். தற்போதும் அவர் பஞ்சாப் மாநிலத்துக்கு ஏதாவது செய்வார் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x