

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களின் மனுக்களும் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசா ரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்கள் மீதான தீர்ப்பை புதன்கிழமை அறிவிப்பதாக நீதிபதி டி'குன்ஹா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெ ரியல் எஸ்டேட்,ஜெ ஃபார்ம் ஹவுஸ்,ஜெ சசி ஹவுஸிங் டெவலப்மெண்ட், கிரீன் ஃபார்ம் ஹவுஸ் மற்றும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய 5 தனியார் நிறுவனங்களின் புதிய மனுக்கள் புதன்கிழமை நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
மாலை 4 மணிக்கு லெக்ஸ் உள் ளிட்ட 5 தனியார் நிறுவனங்களின் மனுக்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமானது. அப்போது நீதிபதி டி'குன்ஹா பிறப்பித்த உத்தரவு: ‘சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள தங்களுடைய நிறுவனங்களை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்த லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ்,மெடோ அக்ரோ ஃபார்ம்,ரிவர்வே அக்ரோ, ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம்,சைனோரா எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் 5 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
வழக்கின் விசாரணையை தாமதிக்கும் நோக்கில் தொடர்ந்து மனு தாக்கல் செய்த 5 தனியார் நிறுவனங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப் படுகிறது. இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்கள் 3 நாட்களுக் குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தில் செலுத்த வேண்டும் என்றார்.
பெங்களூர் சிறப்புநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக் கால தடையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நீக்கி உத்தர விட்டது. எனவே, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தங்களுடைய இறுதிவாதத்தை வியாழக்கிழமை கண்டிப்பாக தொடங்க வேண்டும் என நீதிபதி டி'குன்ஹா ஏற்கெனவே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.