

அரசுப் பணிகளில் உறவினர்களை நியமித்தது தொடர்பான விவகாரத்தால், கேரள தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசில், தொழில் துறை அமைச்சரான ஜெயராஜன், முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் இருந்துவந்தார்.
புதிய அரசு பொறுப்பேற்று, 5 மாதங்களே ஆன நிலையில், கேரள தொழில்துறை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு, தனது உறவினரான பி.கே.சுதிர் நம்பியாரை ஜெயராஜன் நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், ஜெயராஜன் சகோதரரின் மருமகள் தீப்தி நிஷாத் நியமனமும் சர்ச்சைக்கு உள்ளானது.
சுதிர் நம்பியாரின் நியமனத்தை அரசு ரத்து செய்தது. தீப்தி நிஷாத்தும், இரு தினங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகினார். எனினும், நியமன முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்று ஜெயராஜன் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில், கட்சியிடம் முறைப்படி அனுமதி பெற்று அமைச்சர வையில் இருந்து ஜெயராஜன் விலகினார்.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘முந்தைய காங்கிரஸ் அரசிலும், தற்போதைய மத்திய அரசிலும் பல அமைச்சர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினர். ஆனால் யாரும் ராஜினாமா செய்யவில்லை.
அவர்களைப் போல அல்லா மல், சிறந்த முன்மாதிரியாக திகழும் வகையிலும், கட்சியின் மதிப்பை காப்பாற்றவும், ஜெயராஜன் பதவி விலக முன்வந்துள்ளார். அதற்கு கட்சி அனுமதி வழங்கியுள்ளது.
பணி நியமனத்தில் முறைகேடு நடப்பது தடுக்கப்படவேண்டியது. ஆனால், குறிப்பிட்ட பணிக்குத் தகுதியான ஒரு நபரை, உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக தகுதியற்றவராக கருதுவதை ஏற்க முடியாது. ஜெயராஜன் மீதான நடவடிக்கை குறித்து, மத்தியில் உள்ள கட்சித் தலைமை முடிவு செய்யும்’ என்றார்.