Published : 20 Oct 2016 09:11 AM
Last Updated : 20 Oct 2016 09:11 AM

பிஹாரில் அதிக மதிப்பெண் பெற்றதால் அடி உதை: சக மாணவர்கள் தாக்கியதாக தலித் மாணவர் புகார்

தலைமை ஆசிரியர் இடைநீக்கம்

பிஹாரில் பள்ளிச் சீருடையில் மாணவர்கள் சிலர் ஒன்று கூடி, சக மாணவர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, விசாரித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இயக் குனருக்கு மனித வளத் துறை மத்திய இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா உத்தர விட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பிஹாரின் கன்னிப்பூர் பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.

வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பரவிய நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர், காஸி முகமத்பூர் காவல் நிலை யத்தில் தாமாக முன்வந்து புகார் அளித்தார். இதன் அடிப்படை யில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து முஸாஃபர்பூர் காவல்துறை அதிகாரி பப்பன் பைதா கூறும்போது, ‘பல நாட் களாகவே அந்த பையனை 2 மாணவர்களும் அடித்து துன் புறுத்தி வந்துள்ளனர். அடித்தவர் களின் தரப்பிலேயே வீடியோவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

தாக்கப்பட்ட 16 வயது மாணவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுவதை சக மாணவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாகவே தினசரி இந்த அராஜகம் நடந்து வந்ததாக, தனியார் தொலைக்காட்சிக்கு அம்மாணவர் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வன்முறை குறித்து ஆசிரியர் ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஏற்கெனவே புகார் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. தற்போது வீடியோ நாடு முழுவதும் பரவியதும், அவசர அவசரமாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தால் பள்ளி தலைமை ஆசிரியரை கேந்திர வித்யாலயாவின் மத்திய நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக, பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் மற்றும் 14 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x