

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜூன் 30-ம் தேதி 5 வெளிநாட்டுச் செயற் கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த தகவலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை தெரி வித்தது.
பிரான்ஸ் நாட்டின் புவி கண் காணிப்பு செயற்கைக் கோளை (714 கிலோ) பிஎஸ்எல்வி சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தும். அதனுடன் ஜெர்மனியின் 14 கிலோ செயற்கைக் கோள், கனடாவின் தலா 15 கிலோ எடை கொண்ட 2 செயற்கைக் கோள்கள், சிங்கப்பூர் நாட்டின் 7 கிலோ செயற்கைக்கோளையும் இந்த ராக்கெட் சுமந்து செல்லும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தாவன் ஏவுதளத்திலிருந்து இவை விண்ணில் ஏவப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட இந்த நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களுடன் இஸ்ரோவின் விற்பனைப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் கீழ் இவை ஏவப்படுகின்றன. இவை அனைத்தும் பிஎஸ்எல்வி-சி23 ராக் கெட்டுடன் இணைக்கப்பட்டு இறுதிக் கட்ட ஆய்வுகள் தொடர் கின்றன. பயண ஆயத்த ஆய்வுக் குழு, ராக்கெட் ஏவுதல் அனுமதி போர்டு இரண்டும் ஜூன் 27-ம் தேதி கூடி இதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும். முறையான ஒப்புதல் கிடைத்ததும் ஜூன் 28-ம் தேதி காலை 8.49 மணியிலிருந்து 49 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கும். இந்த தகவலை இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் பி.ஆர்.குருபிரசாத் தெரிவித்தார்.