

ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் உறுதியான பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "பாகிஸ்தான் படைகள் பிம்பர் கலி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தின. தானியங்கி இயந்திரங்கள், பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் உறுதியான பதிலடி அளிக்கப்பட்டது" என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்த நாள் முதல், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இதுவரை 30 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.