Published : 02 Oct 2016 10:47 AM
Last Updated : 02 Oct 2016 10:47 AM

மைசூரு தசரா திருவிழா தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா நேற்று தொடங்கியது.

வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவையொட்டி மைசூருவில் உள்ள முக்கிய இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மைசூருவை ஆண்ட‌ உடையார் மன்னர்கள் கிபி 1610-ம் ஆண்டில் இருந்து தசரா விழாவை கோலாகலமாக கொண்டாடி வரு கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசு சார்பில் 11 நாட்கள் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மைசூரு வில் நிகழும் பல்வேறு பாரம் பரிய கலை நிகழ்ச்சிகளை காண சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள்.

இந்த ஆண்டின் மைசூரு தசரா திருவிழா சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் நேற்று காலை தொடங்கியது. கன்னட கவிஞர் சென்னவீரகனவி, சிறப்பு பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகாதேவப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் தசரா விழாவில் கர்நாடகாவில் நிலவும் வறட்சியை வெளிப்படுத்தும் வகையில் நீர் பாதுகாப்பை மையப்படுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, மைசூரு அரண்மனை வளாகத்தில் இளைஞர் தசரா, மகளிர் தசரா, உணவுத் திருவிழா, கலாமந்திர், குத்துச்சண்டை, தசரா திரைப்பட விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை, மிருகக்காட்சிச் சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்காக போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது.

தசரா விழாவையொட்டி மைசூரு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 47 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், பறக்கும் பலூன்கள் மூலமாகவும் நகரை போலீஸார் கண்காணிக்கின்றனர்.

கர்நாடகா- தமிழகம் இடையே காவிரி பிரச்சினை எழுந்திருப்பதால் மைசூரு தசரா விழா இந்த ஆண்டு களை இழந்து காணப்படுகிறது. கன்னட அமைப்பினரின் தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக‌ வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகளும் அச்சம் காரணமாக இம்முறை மைசூரு வரவில்லை என தெரிகிறது.

தசரா விழாவின்போது மைசூருவில் நடைபெறும் பொருட்காட்சியில் வெளி மாநில தொழில் நிறுவனங்கள் சார்பிலும் ஸ்டால்கள் அமைக்கப்படும். இதில் தமிழக நிறுவனங்கள் சார்பில் 70 80 ஸ்டால்கள் இடம்பெறும். இம்முறை 35 தமிழக நிறுவனங்கள் மட்டுமே ஸ்டால்கள் அமைத்துள்ளன. இதேபோல் மற்ற மாநில நிறுவனங்கள் சார்பில் இம்முறை 80 ஸ்டால்கள் வரை மட்டுமே பதிவாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x