

பாலியல் பலாத்காரம் பற்றி உளவியல் ஆய்வு செய்ய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்துப் பேசும்போது, ”நான் அரசியல் தலைவர்களிடம் முறையிடுகிறேன், பாலியல் பலாத்காரம் பற்றி உளவியல் ஆய்வுகளைச் செய்ய வேண்டாம், எப்போதும் ஏதாவது அறிக்கை விட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? அமைதியாக இருக்க முடியாதா?
பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மரியாதை என்பது அனைத்து மக்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
எப்போது பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுகிறதோ, நாம் அது குறித்து ஆய்வு செய்வதை விடுத்து செயல் முனைப்பைக் காட்டவேண்டும். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மரியாதையுடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம். மக்களும், பாதிக்கப்பட்டோரும் நீண்ட நாள் காத்திருக்க மாட்டார்கள். என்றார் மோடி.
மேலும் புனேயில் நடந்த கொலை, இமாச்சலத்தில் மாணவர்கள் மரணம், உத்திரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் என்று அனைத்தையும் சுட்டிக்காட்டிய மோடி, "நடந்தவை துன்பகரமானவை, வலி நிறைந்தவை, நமது மனசாட்சி நம்மை மன்னிக்காது" என்றார்.