சபாநாயகர் ராஜினாமா, ஆர்ஜேடி பிரமுகர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு: பிஹார் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பரபரப்பு

சபாநாயகர் ராஜினாமா, ஆர்ஜேடி பிரமுகர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு: பிஹார் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பரபரப்பு
Updated on
2 min read

பாட்னா: பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் வீடுகளில் இன்று காலை தொடங்கி சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். தலைநகர் பாட்னாவில் உள்ள சுனில் சிங், சுபோத் ராய், டாக்டர் ஃபயாஸ் அகமது மற்றும் அஷ்ஃபக் கரீம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.

மாறிய கூட்டணி: கடந்த 2020-ஆம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக கூட்டணியில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தான் அவாம் கட்சி 4, விகாஸ் ஷீல் இன்சான் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றின. தேர்தலுக்குப் பிறகு விகாஸ் ஷீல் இன்சான் கட்சியின் 3 எம்எல்ஏ.,க்கள் பாஜகவில் இணைந்ததால் அந்தக் கட்சியின் பலம் 77 ஆக உயர்ந்தது. அதனால், ஜேடியு, பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.

அண்மையில் அந்தக் கூட்டணி முறிந்தது. இதனையடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து பிஹாரில் மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார். இந்த நிலையில், இன்று பிஹார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகிக் கொண்டிருந்த நிலையில்தான் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.

'நாங்கள் அஞ்சமாட்டோம்' - ரெய்டு ஒருபுறம் இருக்க சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை விஜய் குமார் சின்ஹா ராஜினாமா செய்தார். சிபிஐ ரெய்டு குறித்து ராப்ரி தேவி கூறுகையில், "நிதிஷ் குமார் தலைமையில் புதிய அரசு அமைந்தது குறித்து அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. மஹா கூட்டணியால் அவர்கள் நடுக்கத்தில் உள்ளனர். பாஜக தவிர அனைத்து கட்சிகளும் எங்களுடன் உள்ளன. எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. சிபிஐ ரெய்டுகள் பயமுறுத்துவதற்காக நடக்கிறது. ஆனால், நாங்கள் அஞ்சமாட்டோம். இது முதன்முறையாக நடக்கவில்லை. எங்கள் எம்எல்ஏ.க்கள் பயத்தில் அவர்களுடன் சேர்வார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்" என்று கூறினார்.

மேலும், ஆர்ஜேடி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ சோதனை நடத்த வேண்டும் என்றால், அதில் உள்ள நோக்கத்தை நீங்களே புரிந்து கொள்ளலாம். லாலு குடும்பத்தினர் பணிந்து பயப்பட மாட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா கூறுகையில் இதனை சிபிஐ சோதனை எனக் கூறுவதைக் காட்டிலும் பாஜக ரெய்டு என்று கூறலாம் எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in