கட்டாய வாக்குப் பதிவு சாத்தியமில்லை: தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

கட்டாய வாக்குப் பதிவு சாத்தியமில்லை: தலைமை தேர்தல் ஆணையர் கருத்து
Updated on
1 min read

நாட்டில் வாக்குப் பதிவை கட்டாயமாக்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறினார்.

வாக்காளர் விழிப்புணர்வு குறித்த சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் நசீம் ஜைதி பேசும்போது, “வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவது சில நாடுகளில் கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. இதை நம் நாட்டிலும் அமல்படுத்துவது குறித்து ஏற் கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த யோசனை நடை முறைக்கு சாத்தியமில்லை என அறிந்தோம். என்றாலும் இது தொடர்பான ஆலோசனைகளைக் கேட்க விரும்புகிறோம்” என்றார்.

கட்டாய வாக்குப் பதிவு தொடர்பான தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி யில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா பதில் அளிக்கும்போது, “இந்த மசோதா கொண்டுவந்த உறுப்பினரின் நோக்கத்தைப் பாராட்டுகிறேன். என்றாலும் கட்டாய வாக்குப் பதிவை நடைமுறைப்படுத்து வதும் வாக்கு அளிக்காதவர்களைத் தண்டிப்பதும் அரசால் இயலாது” என்றார்.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சட்ட ஆணையம் தனது அறிக் கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப் பித்தது. இதிலும் கட்டாய வாக்குப் பதிவுக்கு எதிராகவே பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து நசீம் ஜைதியிடம் செய்தியாளர்கள் பின்னர் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜைதி பதில் அளிக்கும்போது, “சட்ட ஆணையம் இதற்கு ஆதரவு அளித்தாலும், அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே இதை அமல்படுத்த முடியும், புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் உட்பட தேர்தல் ஆணையத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது” என்றார்.

உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் அறிவிப்பு குறித்த கேள்விக்கு ஜைதி பதில் அளிக்கும்போது, “இத்தேர்தலுக்கு எவ்வளவு பாதுகாப்பு படைகள் தேவைப்படும், அப்போதைய காலநிலை, மாணவர்களின் தேர்வு அட்டவணை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இதன் பிறகே தேர்தல் கால அட்டவணை முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in