சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள தீவிரவாதத்தின் தாயகமாக விளங்குகிறது பாகிஸ்தான்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள தீவிரவாதத்தின் தாயகமாக விளங்குகிறது பாகிஸ்தான்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
Updated on
3 min read

சர்வதேச பொருளாதார வளர்ச் சிக்கு தடையாக உள்ள தீவிர வாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இத்தகைய அச்சுறுத்தலையும் இதற்கு ஆதரவு அளிப்பவர்களை யும் எதிர்த்துப் போரிட விரிவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று பிரிக்ஸ் நாடுகளை மோடி வலியுறுத்தி உள்ளார்.

கோவா மாநிலம் பெனாலிம் நகரில் 8-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் மிஷேல் டெமர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பங்கேற்றனர்.

2-ம் நாளான நேற்று பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் அண்டை நாடு (பாகிஸ்தான்) தீவிரவாதத்தின் தாயகமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு இந்த நாட்டுடன் தொடர்பு இருக்கிறது.

அந்த நாடு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டு மல்லாமல், தீவிரவாத மன நிலையை வளர்த்து விடுகிறது. அரசியல் லாபத்துக்காக தீவிர வாதத்தை அந்த நாடு பயன்படுத்து கிறது. இதுபோன்ற மனநிலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டும்.

மேலும் தீவிரவாதிகளுக்கு நிதி, ஆயுதங்கள், பயிற்சி, அரசியல் ஆதரவு கிடைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தீவிரவாத செயலில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் களையும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட தீவிரவாதிகள் அல்லது அமைப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது பயனற்றது. அது எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். (இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. சபை அறிவிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார்)

ஐ.நா.சபையில் நிலுவையில் உள்ள சர்வதேச தீவிரவாதம் மீதான விரிவான உடன்படிக்கையை (சிசிஐடி) விரைந்து நிறைவேற்ற பிரிக்ஸ் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதன்மூலம் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.

நமது வளர்ச்சி மற்றும் பொருளா தார வளம் ஆகியவற்றுக்கு தீவிர வாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இது இப்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் தீவிரவாதத்தை எதிர்த்துக் கூட்டாக போரிட வேண்டியது மிகவும் அவசியம்.

பிரிக்ஸ் நாடுகள் சார்பில் புதிய வளர்ச்சி வங்கி (என்டிபி) மற்றும் எதிர்பாரா செலவின நிதியம் (சிஆர்ஏ) ஆகியவை நிறுவப்பட்டது மிக முக்கியமான சாதனைகள் ஆகும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

சீர்திருத்தங்கள்

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் மோடி பேசும்போது, “கடந்த 2 ஆண்டுகளில், எளிதாகத் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோம். நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளோம். குறிப்பாக நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்த ஏதுவாக ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

பிம்ஸ்டெக் அவுட்ரீச் கூட்டம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குப் பிறகு ‘பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் அவுட்ரீச் கூட்டம்’ நடைபெற்றது. பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் நாடு, அதன் அண்டை நாடுகளை பிரிக்ஸ் அவுட்ரீச் கூட்டத்துக்கு அழைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த மாநாட்டை நடத்தும் இந்தியா, பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி, பூடான் (ஷெரிங் டாப்கே), வங்கதேசம் (ஷேக் ஹசீனா), நேபாளம் (பிரசண்டா), இலங்கை (மைத்ரிபால சிறிசேனா), தாய்லாந்து (வீரசக்தி) மற்றும் மியான்மர் (ஆங் சான் சூகி) ஆகிய பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பின் (பிம்ஸ்டெக்) உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் பலியாயினர். இதனால் பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் உச்சி மாநாட்டை இந்தியா உள்ளிட்ட சில உறுப்பு நாடுகள் புறக்கணித்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் சர்வதேசஅரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சார்க் நாடுகளுக்கு பதிலாக அவுட்ரீச் கூட்டத்துக்கு பிம்ஸ்டெக் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது முக்கித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கூட்டறிக்கை

இந்த மாநாட்டின் முடிவில், கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளில் சமீபத்தில் நடந்த தீவிர வாத தாக்குதல்கள் கண்டிக்கத்தக் கது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்த லாக விளங்கும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர் மானத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் சிசிஐடி-ஐ நிறைவேற்ற அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப் பந்தம் நவம்பர் 4-ம் தேதி நடைமுறைக்கு வரும் என அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவி களையும் வளர்ந்த நாடுகள் செய்ய வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.

அடுத்த பிரிக்ஸ் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு சீனாவில் நடை பெற உள்ளது.

மீனவர் பிரச்சினை

மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் தனியாக சந்தித்து, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, மீனவர் பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண் டும் என்று மோடியிடம் சிறிசேனா வலியுறுத்தினார். அதற்கு மோடி கூறும்போது, “நீண்டகாலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நாம் உரிய தீர்வு காண வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in